This Article is From Dec 30, 2018

‘வேறு வழி தெரியவில்லை..!’- பிளாஸ்டிக் தடை குறித்து மனம் திறந்த ஜெயக்குமார்

‘பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த அதற்குத் தடை விதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று பேசியுள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இது குறித்து கடந்த சில மாதங்களாக தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த அதற்குத் தடை விதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை' என்று பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘நமது கடற்கரைகளில் பெரிய மீன்கள் பல, இறந்து கரை ஒதுங்குகின்றன. அந்த மீன்களின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுக்கப்படுகின்றன.

அதற்கு மட்டுமல்ல, நிலத்தடி நீரும் உயருவதற்கு பிளாஸ்டிக் பெரும் தடையாக இருக்கிறது. பிளாஸ்டிக்கால் பல பிரச்னைகள் இருக்கின்றன. எங்களுக்கு அதைத் தடை செய்வதைத் தவிர, வேறு வழியே தெரியவில்லை. இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம்.

Advertisement

14 வகையான பொருட்களுக்குத் தான் அரசு தடை செய்துள்ளது. மற்றப் பொருட்கள் எல்லாம் வழக்கம் போல பயன்படுத்தலாம். ஆனாலும், உயர் நீதிமன்றம் எல்லா பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கச் சொல்கிறது. மக்களும், பிளாஸ்டிக் தடையை வெற்றிகரமாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உரிய மாற்று வழிகள் குறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்' என்று கூறியுள்ளார்.

Advertisement