New Delhi: பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
#MeToo எனப்படும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடும் பிரசாரம், தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த பிரசாரத்தில் நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், மூத்த பத்திரிகையாளரும், மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பரும் இந்த பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.
இவர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்.ஜே.அக்பரின் கதையை எழுதவுள்ளேன். இந்த கதையில் அவரது பெயரை குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவர் என்னிடம் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஏராளமான பெண்கள் எம்.ஜே. அக்பர் தொடர்பான மோசமான கதைகளை வைத்துள்ளனர். அவர்கள் ஒருவேளை அக்பர் குறித்த விவரங்களை வெளியிடலாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயப்பால் ரெட்டி ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் கூறும்போது, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு எம்.ஜே.அக்பர் திருப்திகரமான பதிலை உடனடியாக தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார். மேலும், இதுகுறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.