தன்மீதான புகார்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அக்பர் கூறியிருந்தார்.
New Delhi: மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பருக்கு எதிராக 10-க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளனர். இந்த விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 8-ம்தேதி இந்த புகார் வெடித்தபோது, எம்.ஜே. அக்பர் நைஜீரியா நாட்டில் இருந்தார். தற்போது நாடு திரும்பியுள்ள அவர், பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தன்மீதான புகார்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனக்கு எதிராக புகாரை அளித்திருக்கும் பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணிக்கு எதிராக அவமதிப்பு வழக்கை எம்.ஜே. அக்பர் தொடர்ந்துள்ளார். அவர் தனது அவமதிப்பு வழக்கு மனுவில், “ வேண்டும் என்றே, அவமானப்படுத்தும் நோக்கத்தோடு என்பது பொய்யான புகார்களை ப்ரியா ரமணி அளித்திருக்கிறார். இதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. அவர் அளித்திருக்கும் புகார் என்னை மிகவும் அவமதிப்பது போன்று உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜே. அக்பர் மேற்கொண்டிருக்கும் பதில் நடவடிக்கையால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று தன்மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்த அக்பர், “ நான் தவறு செய்திருந்தது உண்மை என்றால் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே என் மீது புகார் அளித்திருக்கலாம். இப்போது புகார் தெரிவிக்க காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.