The wild elephant strayed into a village near Silent Valley National Park in Palakkad last Wednesday.
New Delhi: கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் ஒரு வன அலுவலர் பதிவின் மூலம், யானை உயிரிழந்த சோகமான காட்சிகள் வெளிவந்ததை அடுத்து பொதுமக்கள் மத்தியில் கடும் கோபமும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கேரளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். உணவில் வெடிமருந்து வைத்து கொலை செய்வது என்பது இந்திய கலாச்சாரம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான முழுமையான அறிக்கையை கேரள அரசிடம் இருந்து கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்
இந்த சம்பவம் மலப்புரத்தில் நடந்ததாகக் கூறினாலும், யானை கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இறந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து இருந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில் யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர்.
நம்பிக்கையுடன் அன்னாசிப்பழத்தை வாங்கி உண்ட யானை பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடித்துள்ளது. யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது. காயம் ஏற்பட்ட நிலையில் வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை மற்றும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானயைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.