This Article is From Oct 28, 2018

‘அது எப்படி சாத்தியம்..!’- தினகரன் முகாமை சாடும் அதிமுக அமைச்சர்

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கிறார் தினகரன்

‘அது எப்படி சாத்தியம்..!’- தினகரன் முகாமை சாடும் அதிமுக அமைச்சர்

‘உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும். அதே நேரத்தில் இடைத் தேர்தலுக்குத் தயார்' என்று தினகரன் முகாம் தெரிவித்திருக்கும் கருத்தை கடுமையாக சாடியுள்ளார் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மத்தியிலேயே இரு வேறு கருத்து இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘எங்கள் முகாமில் ஒரு குழப்பமும் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று நாங்கள் அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்திருக்கிறோம்.

அப்படி செய்வதன் மூலம் தான், தமிழக சபாநாயகர் தனபாலின் நடவடிக்கை தவறு என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். எனவே, எங்கள் முகாமில் குழப்பம் இருக்கிறது என்று வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

அதே நேரத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதைச் சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று விளக்கம் அளித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயகுமார், ‘உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கிறார் தினகரன். அதே நேரத்தில், இடைத் தேர்தலுக்கும் தயார் என்கிறார். அது எப்படி சாத்தியம்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.