‘வரும் சட்டம்ன்றத் தேர்ததில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி' என்று முழக்கமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்பு கொடுத்துள்ளார். அவர் மேலும், நடிகர் அஜித் கட்சி ஆரம்பித்தாலும் வரேவேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக-வில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதில் ராஜேந்திர பாலாஜிக்கு என்று தனி வரலாறே உண்டு. ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து' என்று கமல் பேசிபோது, ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்' என்றார். டிடிவி தினகரன், அமமுக கட்சியை ஆரம்பித்தபோது, ‘இது என்ன ஒரு கட்சி பெயர். ஆமை மூக்கன் கட்சி என்று' என கேலி செய்தார்.
தற்போது அவர் ரஜினி, அஜித் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். “என்னைப் பொறுத்தவரையில் நல்ல மனம் உடையவர்கள், சமூகத்தை மதிப்பவர்கள், பெற்றவர்களை, பெரியவர்களை மதிப்பவர்கள் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன். அந்த வகையில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன். தன் தொண்டர்களை வழிப்படுத்தும், நெறிப்படுத்தும் திறன் உள்ளவர் ரஜினி. அதைப் போலத்தான் அஜித்தும். அவர் கட்சி ஆரம்பித்தாலும் வரவேற்பேன். இருவரும் கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன் என்று சொல்வதால் மட்டும் அதிமுக-விலிருந்து விலகிவிடுவேன் என்று சொல்வதற்கில்லை” என்றார்.
‘விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு கொடுப்பீர்களா' என்று கேட்கப்பட்டதற்கு, “விஜய் குறித்து எனக்குத் தெரியாது. அவர் பற்றி கருத்து சொல்ல ஏதுமில்லை” என்று முடித்துக் கொண்டார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்' படத்திற்கு அதிமுக-வினர் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்தார். அந்தப் படத்தில் அதிமுக அரசின் திட்டங்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, “வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல” என்று நேரடியாக எச்சரிக்கை செய்யும் அளவுக்குப் பிரச்னை வளர்ந்தது.