கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்றபோது, ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்,’ என்று கொந்தளித்தார் ராஜேந்திர பாலாஜி.
ஹைலைட்ஸ்
- விருதுநகர் மாவட்டத்தின் மா.செ-வாக இருந்தார் ராஜேந்திர பாலாஜி
- தமிழக பால் வளத் துறை அமைச்சராக தொடர்கிறார் ராஜேந்திர பாலாஜி
- மா.செ பதவிப் பறிப்பு குறித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது
தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தார். இந்நிலையில் அவர் பதவி பறிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்கிற திடுக்கிடும் பின்னணி தெரியவந்துள்ளது.
பொதுவாகவே, எதிர்க்கட்சியினரையும், தனக்கு எதிரான கட்சிக்காரர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிப்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து' என்றபோது, ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்,' என்று கொந்தளித்தார் ராஜேந்திர பாலாஜி.
அதேபோல தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான வைகைச் செல்வனோடு பிரச்சினை ஏற்பட்டபோது, “வைகைச் செல்வன் சீக்கு வந்த கோழி. கெட்டுப்போன தக்காளி,” என்றெல்லாம் பேசி அதிரவைத்தார்.
அதேபோல சமீபத்தில், “இந்து தீவிரவாதம் எழுவதைத் தவிர்க்க முடியாது,” என்று தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார். அவரின் இந்த தொடர் பேச்சுகளுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் அளவுக்குப் பூதாகரமானது நிலைமை.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துக்களின் மத வழிபாட்டுத் தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்கக் கூடிய சம்பவம் ஒரு பாடம்..! ஒரு படிப்பினை..!
இறைவா ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனாவிடமிருந்து காப்பாற்று,” எனப் பதிவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த கருத்திற்காகத்தான், அதிமுக கட்சித் தலைமை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.