RSS chief Mohan Bhagwat - 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பொறுத்தவரை நாட்டில் வாழும் 130 கோடி பேறும் இந்துக்கள்தான்'
Mumbai: இந்தியாவில் இருக்கும் 130 கோடி பேரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்துக்கள்தான் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கமான ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்லி இருக்கிறார். இந்தக் கருத்துக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
“அனைத்து இந்தியர்களும் இந்துக்கள்தான் என்று சொல்வது சரியல்ல. ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்தவர்கள் அனைவரும் பௌத்தர்களாக இருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர், அனைவரும் இந்தியர்கள் என்று சொன்னால், அது சரியானது. நம் நாட்டில் பௌத்தர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், பார்சீக்கள், ஜெயினர்கள், லிங்காயத்துகள் மற்றும் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார் அத்வாலே.
சட்ட மேதை அம்பேத்கர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவை தலைமை தாங்கி நடத்தி வருபவர் அத்வாலே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சி மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
முன்னதாக ஐதராபாத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், “இந்தியக் குடிமகனான ஒருவர் எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம், எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், எந்த வழிபாட்டு முறையிலும் ஈடுபடலாம், இந்து மதம் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு இந்துவாகத்தான் இருப்பார். அப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பொறுத்தவரை நாட்டில் வாழும் 130 கோடி பேறும் இந்துக்கள்தான்,” என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசினார்.
பகவத்தின் பேச்சுக்கு ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி, பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் ஒரு மதம்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியல் சட்ட சாசனம் இருக்கும் வரை அது நிறைவேறாது. இந்த நாடு அனைத்து மதத்தையும் ஏற்றுக் கொள்கிறது,” என்றுள்ளார் ஒவைசி.
(With inputs from ANI)