கடந்த 1992ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளுக்கு ஏராளமான பரிசு பொருட்களும், காசோலைகளும் வந்தன. இதன் மதிப்பு 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. முதல்வராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், பரிசு தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து பரிசு பொருட்கள் பெறுவது தொடர்பாக ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வழக்கில் அமைச்சர் செங்கோட்டையனை உயர்நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஏற்கனவே நடந்த வழக்கு விசாரணையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், பல கட்ட விசாரணைக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கு நீதிபதி பானுமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பாக தொடரப்பட்டது என்றும் மேலும் இந்த வழக்கு விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம் எனவும் கேள்வி எழுப்பினார். இதனை ஆண்டுகள் நடைபெற்று வரும் வழக்கில், குற்றம் நிகழ்த்ததற்கான முக்கிய காரணிகளை சிபிஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எப்ஐஆர் காலதாமதமாக பதிவு செய்துள்ளது என்றும், விசாரணைக்கு காலதாமதம் ஆகியது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அதாவது, 1991ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், 1996ம் ஆண்டு இது தொடர்பாக எப்ஐஆர் போடப்பட்டு, அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து (2006ம் ஆண்டு) சார்ஜ் சீட் தயாரானது.
இவ்வளவு காலதாமதம் காரணமாகவே உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததாக உச்சநீதிமன்ற நீதிபதி கூறினார். எனவே, இந்த காலதாமத்தை எதிர்மனுதாரர்கள் சாதகமாக கொண்டுள்ளதாக கூறிய நீதிபதி அமைச்சர் செங்கோட்டையனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து, பரிசுப்பொருள் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.