This Article is From Apr 15, 2020

வதந்திகளை நம்பாதீர்கள்! மே.3ம் தேதி வரை எந்த ரயிலும் இயங்காது: ரயில்வே அமைச்சகம்

நாடு முழுவதும், அனைத்து பயணிகள் ரயில்களும் மே.3 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் கூடுவதை தவிர்க்க எந்த சிறப்பு ரயிலை இயக்கும் திட்டமும் இல்லை

வதந்திகளை நம்பாதீர்கள்! மே.3ம் தேதி வரை எந்த ரயிலும் இயங்காது: ரயில்வே அமைச்சகம்

வதந்திகளை நம்பாதீர்கள்! மே.3ம் தேதி வரை எந்த ரயிலும் இயங்காது: ரயில்வே அமைச்சகம் (Representational)

ஹைலைட்ஸ்

  • மே.3ம் தேதி வரை எந்த ரயிலும் இயங்காது
  • எந்தவித சிறப்பு ரயிலை இயக்கும் திட்டமும் இல்லை
  • தவறான தகவல்களை நம்பவேண்டாம் - ரயில்வே அமைச்சகம்
New Delhi:

நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை எந்த பயணிகள் ரயிலையும் இயக்கும் திட்டமில்லை என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச்.24ம் தேதியன்று, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு பெரும் நகரங்களில் உள்ள வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் எந்தவித வருமானமும் இல்லாமல், தங்களது சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் கடந்த 3 வாரங்களாகத் தவித்து வந்தனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று காலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 

இதனால், மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கூடினர். எனினும், அங்கு ரயில் சேவை எதுவும் இயக்கப்படவில்லை என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர். 

இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நாடு முழுவதும், அனைத்து பயணிகள் ரயில்களும் மே.3 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக எந்தவித சிறப்பு ரயிலை இயக்கும் திட்டமும் இல்லை. இதுகுறித்து வரும் எந்த தவறான தகவலையும் நம்பவேண்டாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டபோது, ரயில்வேயில் முன்பதிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஆரம்பம் ஆகியது. இதனால் ஆர்வத்துடன் பயணிகள் மளமளவென டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரயில்களின் இயக்கமும் ரத்தாகியுள்ளது. இதையடுத்து 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் செலுத்திய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் பணம் வழங்கப்படவுள்ளது.

நேரடியாக கவுன்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுத்தவர்கள் ஜூலை 31-ம்தேதிக்குள் நேரில் சென்று டிக்கெட்டுக்கான முழு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.