বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 30, 2019

தொழில் தோல்வி.. அதிகாரியின் டார்ச்சர்! ’காஃபி டே சித்தார்த்தின் உருக்கமான கடிதம்’!

சித்தார்த்தாவால், லாபகரமான தொழிலாக எடுத்துச்செல்ல முடியவில்லை என்றும், ஒரு மூத்த வருமான விரித்துறை அதிகாரியால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
Karnataka Edited by

வி.ஜி.சித்தார்த்தா, முன்னாள் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.

Bengaluru:

'கஃபே காஃபி டே' நிறுவனரும், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் நேற்று இரவு முதல் மாயமாகியுள்ளார். முன்னதாக, தான் மாயமாவதற்கு முன்பு சித்தார்த்தா தனது அனைத்து நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சித்தார்த்தாவால், லாபகரமான தொழிலாக எடுத்துச்செல்ல முடியவில்லை என்றும், ஒரு மூத்த வருமான விரித்துறை அதிகாரியால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 


மேலும், சித்தார்த் எழுதியுள்ள அந்த கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும், என்னால் சரியான லாபகரமான தொழிலாக எடுத்துச்செல்ல முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் நீண்ட காலமாக போராடினேன், ஆனால் இன்று என்னால் எந்த அழுத்தத்தையும் எடுத்துச்செல்ல முடியாததால் கைவிடுகிறேன்.

ஒரு தனியார் நிறுவன பங்குதாரர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி எனக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். நான் நீண்ட நாள்களாக அதனுடன் போராடி வருகிறேன். இதனால், என் நண்பர்களிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர் என்று அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

கடைசியாக பெங்களூரில் இருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள பாலத்தில் சித்தார்தா காணப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 1 கி.மீ நீளமுள்ள அந்த ஆற்று பாலத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில போலீசார் மிதவை படகுகள் மூலம் ஆற்றில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து சித்தார்த்தாவின் ஓட்டுநர் கூறிய தகவலின்படி, நேத்ராவதி ஆற்று பாலத்தில் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி நடந்து சென்றுள்ளார். ஓட்டுநரை காத்திருக்குமாறு கூறி சென்ற அவர், 1 மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பிவரவில்லை. இதையடுத்து, பதற்றமடைந்த ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 


கடந்த 2017 செப்டம்பர் மாதம் சித்தார்த்தாவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய காஃபி பீன் ஏற்றுமதியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

மாயமான விஜி சித்தார்த்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜி சித்தார்த்தின் தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது. 
 

Advertisement
Advertisement