Ranchi: ராஞ்சி: அன்னை தெரேசா தொடங்கிய மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொண்டு அமைப்பின் ராஞ்சி குழந்தைகள் காப்பகத்தில், குழந்தைகள் விற்கப்பட்டதாக கன்னியாஸ்திரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்றும், போலீஸார் அவர்களை தரக் குறைவாக நடத்துவதாகவும் பல தரப்பில் இருந்து ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. நேற்று ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திடம் இருந்தும் ஆதரவு அறிக்கை வந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரி உண்மையை ஒப்புக் கொள்வதாக பேசும் வீடியோ வெளியானது. அதில், மூன்று குழந்தைகள் விற்கப்பட்டன. ஒரு குழந்தை பணம் எதுவும் பெறாமல் தத்து கொடுக்கப்பட்டது என்று அவர் பேசுகிறார்.
இந்த வழக்கு விசாரனை குறித்து கருத்து தெரிவித்த பிஷப் தியோடர் மாஸ்கரென்ஹஸ் “ஒட்டு மொத்த மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பயும் கிர்மினல்கள் போல் காவல் துறை நடத்துகின்றனர்” என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், காவல் துறையினரின் வற்புறுத்தலின் பேரில் தான் கன்னியாஸ்திரி குற்றத்தை ஒப்பு கொண்டதாகவும் பிஷப் தெரிவித்தார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் எச்சூரி ஆகியோரும் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஜார்கண்ட் போலீஸார் இந்த எதிர்ப்புகளால் பின் வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து அந்த அமைப்புக்கு வரும் நிதியை பற்றி சி.பி.ஐ விசாரிக்கவும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.