வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சி அடைய செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார்.
Aizawl: மிசோரம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிகளவு நிதியை அளித்து வருவதாகவும், அவை அனைத்தையும் மாநில அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் வரும் 28-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், லாங்டிலாய் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது-
அடுத்த 6 மாதத்திற்குள் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம். மலைவாழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும்.
மிசோரம் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நிதிகளை அளித்துள்ளது. இதனை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சி பெறச் செய்ய பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் மத்திய பாஜக அமைச்சர்கள் 200-க்கும் அதிகமான முறை வந்து பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு அமித் ஷா பேசினார்.