ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது வைரலாகி வருகிறது’ - அக்பர்
New Delhi: பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அளவில் பெரும் சலசலப்பை கிளப்பி வரும் #MeToo ஹாஷ்டேக் மூலமே சமூக வலைதளங்களில் பெண்கள் அக்பருக்கு எதிராக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதவி விலகுவார் என்று யூகிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார் அக்பர்.
அக்பர் மீது பரவலான பெண்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, நேற்று அவர் அறிக்கை மூலம், ‘ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது வைரலாகி வருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும், ‘என் மீதான புகார் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரிவித்திருக்கலாம். இப்போது புகார் தெரிவிக்க என்ன அவசியம். பொய்யான புகார்கள் என் மீது அளிக்கப்பட்டுள்ளன. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்று தெரிவித்தார்.
தி டெலிகிராஃப், தி ஏசியான் ஏஜ் போன்ற பிரபல இதழ்களில் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர் எம்.ஜே. அக்பர். எம்.ஜே. அக்பர் தன்னுடன் பணியாற்றியவர்கள், புதிதாக பணிக்கு சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் பிரியா ரமணிதான் அக்பர் மீதான புகாரை முதன் முதலில் கடந்த 8-ம் தேதி ட்விட்டரில் தெரிவித்தார். பிரியா ரமணிக்கு பின்னர் பிரேர்னா சிங் பிந்த்ரா, கஜாலா வஹாப், சுதாபா பால், அஞ்சு பாரதி, சுபர்னா சர்மா, சுமா ராஹா உள்ளிட்டோர் அக்பர் மீது புகார் தெரிவித்தனர்.