அக்பருக்கு ஆதரவாக அவரது மனைவி மல்லிகாவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
New Delhi: பாலியல் குற்றச்சாட்டு காரணமாக மத்திய வெளியறவு இணையமைச்சர் பொறுப்பில் இருந்து எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்த நிலையில், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் சம்மதத்துடன்தான் உறவு வைத்திருந்ததாக அக்பர் விளக்கம் அளித்திருக்கிறார்.
மத்திய வெளியுறவு இணை அமைச்சராக மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் பதவி வகித்திருந்தார். அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, சக பெண் பத்திரிகையாளர்களிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகாய் முதலில் பிரச்னையை கிளப்பினார். இதன்பின்னர் ஒருவர் பின் ஒருவராக #MeToo விழிப்புணர்வு பிரசாரத்தின் கீழ் அக்பர் மீது புகார்களை குவிக்கத் தொடங்கினர். இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சரும், அக்பருக்கு சீனியருமான சுஷ்மா சுவராஜ் பதில் ஏதும் அளிக்காமல் இருந்தது, மத்திய பாஜக அரசுக்கு கூடுதல் சிக்கலை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தன்மீது பாலியல் புகார் அளித்தவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வதாக அக்பர் அறிவித்தார்.
இருப்பினும் அவர் மீது புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை தொடர்ந்து கிளப்பியதாலும், அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அக்பர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
1994-ம் ஆண்டின்போது, பல்லவி கோகாயின் முழு சம்மதத்துடன்தான் அவருடன் உறவு வைத்திருந்தேன். இது சில மாதங்களுக்கு நீடித்தது. இந்த உறவு சர்ச்சையையும் எங்களது வீட்டில் பிரச்னையையும் ஏற்படுத்தியது. பின்னர் கோகாய் உடனான உறவை நிறுத்தி விட்டேன். இந்த நிகழ்வு என் வாழ்வில் குறிப்பிடும்படியான ஒன்று அல்ல. இவ்வாறு அக்பர் கூறியுள்ளார்.
அவருக்கு ஆதரவாக மனைவி மல்லிகா அக்பரும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது கணவருக்கும் பல்லவி கோகாய்க்கும் இருந்த உறவு குறித்து எனக்கும் தெரியும். இரவில் அவர் என் கணவரை அழைப்பார். பொதுவெளியில் இருவரும் சுற்றித் திரிந்தனர். இதுபற்றி கணவரிடம் நான் சண்டையிட்டேன். பின்னர் அவர் திருந்தி குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார்” என்று கூறியுள்ளார்.
NDTV-யிடம் நீங்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், இந்த மின்னஞ்சலை பயன்படுத்துங்கள் worksecure@ndtv.com