எம்.ஜே. அக்பருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் இணைய தளத்தில் அதிகளவு பரப்பப்பட்டன.
New Delhi: பாலியல் குற்றச்சாட்டுகளால் பதவி விலகக்கோரி நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னால் முடிந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நீதியை பெறும் முடிவில் இருந்தேன். சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் பதவியை ராஜினாமா செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நாட்டுக்காக பணி செய்யும் வாய்ப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
அந்த காலகட்டங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரை 15 பெண் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். அவர்களில் முதலில் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்பவர் மீது மான நஷ்ட வழக்கை அக்பர் தொடர்ந்திருக்கிறார்.
எம்.ஜே. அக்பருக்கு எதிராக புகார்கள் கடந்த 8-ம்தேதியில் ஒவ்வொன்றாக வெடித்து வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொந்தக் கட்சிக்குள்ளே பல அமைச்சர்கள் வலியுறுத்த தொடங்கினர்.
மத்திப பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் அக்பர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் அக்பர் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சீண்டியது. நாட்டை ஒழுக்கமுடையதாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், ஒழுக்கமற்றவர்களை அமைச்சராக்கி உள்ளனர் என்று அக்கட்சி விமர்சித்தது.
இதற்கிடையே, அக்பர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, அக்பர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இவ்வாறாக அக்பர் மீதான நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததது. இந்த நிலையில்தான் தனது பதவியை எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.