This Article is From Mar 20, 2019

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்!

திருவாரூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி உள்ளார்.

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்!

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

இதில், படிப்படியாக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, தொகுதி வேட்பாளர்கள் பெயரையும் திமுக அறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, அதில் முக்கியமாக மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூ.8 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும். வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட 43 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக திமுக வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இன்று மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். திமுக சார்பில் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

.