This Article is From Dec 02, 2019

“தேர்தல் ஆணையர் பழனிசாமியா அல்லது…”- உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை கேலி செய்யும் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது

Advertisement
தமிழ்நாடு Written by

உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் (Loval Body Elections) நடைபெறும் தேதிகளை இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி (Palanisamy) அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் பகுதி பகுதியாகவே நடக்கும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளதை விமர்சித்துள்ளார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin).

“தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், தமிழக அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். அதாவது திமுக-தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கிறதாம். பட்டியலினத்தோருக்கான இடங்கள் ஒதுக்கீடு, பழங்குடியினருக்கான இடங்கள் ஒதுக்கீடு, பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் தெளிவு இல்லை என்ற காரணத்தினாலேயே, நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டோம். அதேபோல புதிய மாவட்டங்களை பிரித்ததை அடுத்து செய்யப்பட்ட வரையறைகள் யாவை என்றும் தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுள்ளோம். அதற்கும் இதுவரை பதில் இல்லை. இப்படி, தெளிவின்மை நிலவும் நிலையில், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். 

தமிழக வரலாற்றில் எந்தத் தேர்தலும் பகுதியாக பகுதியாக நடத்தப்பட்டதில்லை. ஆனால், முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தல் பகுதி பகுதியாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதைப் பார்க்கும் போது மாநில தேர்தல் ஆணையர், பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது,” எனக் கூறியுள்ளார். 

Advertisement

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என பலதரப்பினரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. 

இதனை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்படி கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது.

Advertisement


 

Advertisement