This Article is From Apr 11, 2019

அமைச்சர் வேலுமணி குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரங்களில் பேசுவதற்கு எதிராக தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதின்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் வேலுமணி குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து, தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுகவின் பொள்ளாச்சி வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்துடன் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்புகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை அவர் தப்பிக்க வைக்க முயலுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், பொள்ளாச்சி விவகாரத்தில் தன் பெயரை தொடர்புப்படுத்தக்கூடாது எனவும், தன்னை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் வேலுமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தேர்தல் நேர பிரசாரத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது வாடிக்கை தான். எனவே ஸ்டாலினுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.

.