This Article is From Jun 28, 2019

தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவர் மு.க.ஸ்டாலின்: தங்க தமிழ்ச்செல்வன்

ஒற்றை தலைமையில் உள்ள கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும், அப்படி செயல்பட்டதன் காரணமாகவே திமுக இன்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவர் மு.க.ஸ்டாலின்: தங்க தமிழ்ச்செல்வன்

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

அமமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தங்க தமிழ்செல்வன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

முன்னதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியானது. 

அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்கதமிழ்ச்செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது.

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தல், மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படு தோல்வியை சந்தித்தது. இதேபோல், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார். இதையடுத்து, தங்க தமிழ்செல்வன் டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. 

இந்நிலையில், அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், தன்னைப் பார்த்தால் தங்க தமிழ்ச்செல்வன் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கு பதிலாக வேறு ஒரு கொள்கை பரப்புச்செயலாளரை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார். தமிழக அரசியலில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  

இந்நிலையில், தற்போது அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் இன்று பிற்பகல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் கூறியதாவது, தேர்தலில் மக்கள் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். ஒரு நல்ல தீர்ப்பை தேர்தல் முடிவுகள் அளித்துள்ளது. 

அந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே நான் திமுகவில் இணைந்துள்ளேன். கலைஞருக்கு பிறகு அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைவராக ஸ்டாலின் உள்ளார், அண்ணா சொன்னதை கடைபிடிப்பவராக இருக்கிறார். அதிமுகவில் இருந்த வந்த நிர்வாகிகள் எல்லோருக்கும் நல்லதை தானே செய்துள்ளார். எந்த விரோதமும் இல்லையே. 

ஒற்றை தலைமையில் உள்ள கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும், அப்படி செயல்பட்டதன் காரணமாகவே திமுக இன்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. அதிமுகவை பாஜகவே இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதில் தன்மானத்தை இழந்து நான் சேர விரும்பவில்லை. தமிழக மக்களுக்காக ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார், மக்களவை தேர்தலில் பெரிய வெற்றியை திமுகவுக்கு மக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.  

இரண்டு விஷயங்களில் நான் மு.க.ஸ்டாலினை பாரட்டுகிறேன். ஒன்று அவர், கடுமையாக உழைப்பாளி, இரண்டவாது அவரது தந்தை கலைஞர் மறைந்த அன்று உயர்நீதிமன்றம் சென்று ஒரே நாளில் அவருக்கு மெரினாவில் இடம் வாங்கிய துணிச்சலான முடிவை பாராட்டுகிறேன். 

ஆர்.கே.நகரில் தோற்றாலும், மக்களவையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார். கேட்டு வாங்குவது பதவி கிடையாது. உழைத்த பிறகு தலைமை தருவது. என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.  
 

.