சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!
முந்தைய திமுக ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழ்நாடே இருளில் மூழ்கி இருந்ததை மறந்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில், தமிழகத்தில் மின் கட்டண அதிகரிப்பு குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக செய்திக்குறிப்பு ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலைகொள்ளாத கருணையற்ற போக்காகும்.
ஆகவே, அதிமுக அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்கக் கோரியும், குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், வரும் 21-7-2020ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவை என தற்போது கூறும் எதிர்க்கட்சித் தலைவர் முந்தைய திமுக ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழ்நாடே இருளில் மூழ்கி இருந்ததை மறந்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறார்.
நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வு, இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில் சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு முதல் கொண்டு வந்த 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கெனவே மார்ச்-ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது.
மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத் தொகை சரி செய்யப்படும்.
மின்சாரம் என்பது மக்களது மிகமிக அவசியத் தேவை என்று கூறும் ஸ்டாலின், அந்த மின்சாரத்தை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சரிவர வழங்காமல் தமிழ்நாட்டினை இருளில் ஆழ்த்திவிட்டு, அவர்கள் ஆட்சிக் காலத்தில் கொடுத்த அரைகுறை மின்சாரத்திற்கு எந்தவித சலுகையும் அளிக்காமல், தற்போது மின்சாரத்திற்கு சலுகை என கூப்பாடு போடுவது, மக்களை திசை திருப்பும் நாடகம் மட்டுமே. அது ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.