கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
Chennai: தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டும் என்றால் அதற்கான வலிமை ராகுல் காந்திக்குதான் உண்டு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கட்சியின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை முன் மொழிந்தார். அவரது பேச்சு தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இப்படி அறிவிப்பு வெளியிடக் கூடாது என்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசத் தொடங்கினர். தமிழக அரசியலிலும் ஸ்டாலினின் பேச்சு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில், கட்சி தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்டாலின் தனது கடிதத்தில், ''தமிழ்நாட்டை மோடி அரசு ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கிறது. அதனை வீழ்த்திட வேண்டும் என்றால் அதற்குரிய வலிமை கொண்டவரும், பாஜகவின் கோட்டையாக இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தவருமான ராகுல் காந்தியை முன்னிறுத்துவதுதான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்று உரக்கச் சொன்னேன்'' என்று கூறியுள்ளார்.