"புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி..."
புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “இந்தியா என்பது பல்வேறு இனக்குழுக்கள், மதத்தினர் வாழும் நாடு. இங்கு மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கும் எந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதை புதுச்சேரி மாநில மக்களும் நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். யார் அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் மேலும், “மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்பட்டால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 147 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவைப்பட்டால் நானே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன்,” என்று அதிரடியாக பதில் அளித்தார்.
இது குறித்து ஸ்டாலின், “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி.
புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம்- சமூகநீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம்- ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம்; ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.
“இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை”என்று, தலைவர் கலைஞர் அவர்களின் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.