“கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்”
கொரோனா காலக்கட்டத்தில், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு பருவத் தேர்வு குறித்து சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர், இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்று 26.8.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதலமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும் - ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை.
பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக்கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24-ம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை - எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர். கொரோனா பேரிடரின் இன்னலுக்கு உள்ளானதால், சில கல்லூரிகளில் 70 சதவீத மாணவர்கள் கூட பருவத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன.
தமிழக அரசு நியமித்த உயர்மட்டக்குழு, “கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து” மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார்.
ஆகவே, “கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்” என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலம் பற்றிப் பெற்றோர்களின் மனக்கவலை அதிகரித்துள்ள இந்தச் சூழலில், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகண்டு - உரிய முடிவுகளைக் காலதாமதமின்றி அறிவித்திட வேண்டும் என்றும், ஏற்கனவே இறுதியாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 'கேம்பஸ் இண்டர்வியூ' மூலம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிறுவனங்கள் - அந்த வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக் கூடாது என்று அரசின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.