This Article is From Jan 18, 2019

ஆட்சியின் இறுதியில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய சதி வலை! - மு.க.ஸ்டாலின் காட்டம்!

சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார இட ஒதுக்கீடாக மாற்றி மிகப் பெரிய சதி

Advertisement
தமிழ்நாடு Posted by

சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார இட ஒதுக்கீடாக மாற்றி மிகப் பெரிய சதி வலையை தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் நிச்சயம் மறந்து விடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்மை காய்வதற்குள் “2019-20 கல்வி ஆண்டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்” என்று ஜெட் வேகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து 25 வருடங்களுக்கு மேலான பிறகும் அந்த சமுதாயத்தினரால் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் தங்களது உரிமையைப் பெற முடியவில்லை. பறிக்கப்பட்டுள்ள இந்த சமூக நீதி பற்றி பிரதமர் நரேந்திர மோடி கண்டு கொள்ளவில்லை. முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க அவசரம் காட்டவில்லை. ஏன் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது துறையில் கூட மண்டல் கமி‌ஷனை முழுமையாக அமல்படுத்த முயற்சிக்கவே இல்லை!

நாட்டில் பல்வேறு பிளவு பாதைகளை வகுக்க முற்பட்டு, அத்தனையிலும் தோற்றுவிட்ட நிலையில், “முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு” என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை! இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

Advertisement

வளர்ச்சி என்ற மாய ஜாலத்தை காட்டி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்.

சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார இட ஒதுக்கீடாக மாற்றி மிகப் பெரிய சதி வலையை தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் நிச்சயம் மறந்து விடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

ஆகவே தான் செய்த துரோகத்திற்கு பிராய சித்தமாக மத்திய அரசு துறைகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சென்றடைய எஞ்சியிருக்கின்ற நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகையில் மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று இந்தியாவின் “சமூக நீதித் தொட்டில்” எனக் கருதப்படும் தமிழகத்திலிருந்து திமுகவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement