ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் தீவிரம் காட்டுகிறது திமுக.
- #DMKmanifesto2019 என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்கள் தங்களது கருத்துக்களை திமுகவுக்கு தெரிவிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற சுமார் 30 நிமிட பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகளும், புதுவை தொகுதியும் ஒதுக்கப்படும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதில் திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் கே.எஸ். அழகிரியும் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணி ஓரளவு உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக இறங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் புதிய முயற்சியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
மக்கள் தங்களது கருத்துகளை dmkmanifesto2019@dmk.in மற்றும் #DMKmanifesto2019 என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்யலாம் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க - “தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? மு.க.ஸ்டாலின் பளீர்”