ஹைலைட்ஸ்
- இடஒதுக்கீட்டின் உண்மையான சாராம்சத்தில் கிரிமிலேயர் என்பது இல்லை
- கிரிமிலேயர் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க
- நீட் கல்வியின் மூலமாக மருத்துவ கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிது
நீட் தேர்வு ரத்து மற்றும், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில்…
இதுவரையில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள நிலையில், நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் ஏற்பட்டிராத இந்தப் பிரச்சினையால், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர்தான் மற்றவர்களை விடவும் அதிகமான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், அனைத்துக் குடிக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும்.
இடஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணி சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை தானே தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை அல்ல. பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது. இடஒதுக்கீடு தொடர்பாக நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அது இடம் பெறாததற்கு அதுவே காரணம். கிரிமிலேயர் பிரச்சினையில் தொடக்கத்திலிருந்தே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம். எனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், கிரிமிலேயரை வகைப்படுத்துவதற்கான வருவாய் ஆய்வு வரம்பிற்குள் அவர்களது சம்பளத்தைச் சேர்ப்பது என்பது, இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் சமூகத் தடைகளைப் புறக்கணிப்பது போன்றதாகும். இடஒதுக்கீட்டின் உண்மையான சாராம்சத்தில் கிரிமிலேயர் என்பது இல்லை. 1980-ம் ஆண்டு மண்டல் கமிஷன், மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர், அதாவது 1257 சமூகங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப் படுத்தியிருப்பதே, இந்த மக்களுடைய எண்ணிக்கையையும் இந்த சமூகப் பிரிவு மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிரிமிலேயர் என்ற கருதுகோள் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கிரிமிலேயருக்கான கருதுகோளை நெறிப்படுத்துதல், எளிமைப்படுத்துதல் என்ற பெயரில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சலுகைகளைப் பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அந்த வல்லுநர் குழு சில பரிந்துரைத்துள்ளது. மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அரசியல் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒர் அரசியல் சட்டப்படியான அமைப்பாக இருப்பதால், இந்தியாவின் பிராந்தியங்களில் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலை மற்றும் அவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை நீக்குவதற்கும், அவர்களது நிலையை மேம்படுத்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை வழங்கும் பணி, பிரத்தியேகமாக அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தப் பணிகளை மேற்கொள்ளும் வல்லுநர் குழுவை அரசியல் சட்டப்படியானதாக ஏற்க முடியாது. மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை குறைத்து மதிப்பிடுவதுமாகும்.
இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுவதாலும், இம்முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், குறிப்பாக இத்தகைய நெருக்கடியான நேரத்தில் இம்முடிவினை திரும்பபெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல்
நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களிலும் மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் எந்த ஒரு குடியிருப்பு அல்லது நிறுவன தடைகளும் இன்றி போட்டியிட அகில இந்திய ஒதுக்கீடு என்ற கருத்தை 1984-ம் ஆண்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. இன்றைய நிலவரப்படி அகில இந்திய ஒதுக்கீடு என்பது நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்டது தானே தவிர சட்டப்படியானது அல்ல. 36 ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்துள்ள மருத்துவ இடங்களின் அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டின் தேவை இனி பொருந்தாது. மாறிவரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பு என்பது நாடாளுமன்றத்தாலும், நிர்வாகத்தாலும் நிர்வகிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதுமே உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்பதையும், பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்கான தேவை பெருமளவில் குறைந்து விட்டதையும் கவனத்தில் கொண்டு அகில இந்திய ஒதுக்கீடை மத்திய அரசு ரத்து செய்து விடமுடியும். அதற்கு பதிலாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டவை போக, மீதமுள்ள இடஒதுக்கீடு கோட்டா அல்லாத குறிப்பிட்ட சதவீத இடங்களில், பிற மாநில மாணவர்கள் போட்டியிட முடியும். இந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கென குறிப்பிட்ட சதவீத இங்களை தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது.
நீட் தேர்வினை ரத்து செய்தல்
நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்த தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் பட்டியல் 3-ன்கீழ் பொதுப்பட்டியலில் உள்ள இதன் மீதான மாநில அரசின் உரிமையைக் குறைப்பதோடு மருத்துவக் கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிறது. அதோடு நீட் தேர்வானது, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே சாதகமான ஒன்று என்பது வெளிப்படையானது. இந்த அணுகுமுறை கல்வித்தரத்தில் வேறுபாடுகள் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இது மற்ற பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். இறுதியாக நீட் தேர்வு நடத்தப்படும் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவும் தேர்வு பெறுவதற்காகவும் தனியார் பயிற்சிக் கூடங்களை மாணவர்கள் நாட வேண்டியுள்ளது வெளிப்படையான ஒன்று. இந்த தனியார் பயிற்சி மையங்களில் கட்டணம் அதிகம் என்பதால் மாநிலங்களிலுள்ள பல மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சட்டத் திருத்தம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்னல்களையும் தடைகளையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, இந்தியப் பல் மருத்துவர்கள் சட்டம் 1948 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ஆகியவற்றில், அவசரச் சட்டத்தின் மூலமாக உரியத் திருத்தங்கள் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் நான் உங்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலே சுட்டிக்காட்டிய பிரச்சினைகளின் அடிப்படையில்,
1) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த முடிவைத் திரும்பப் பெறுதல்.
2) மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல்
3) மருத்துவ படிப்புகள் இளங்கலை முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்தல்
- ஆகியவற்றைச் செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தொற்றுநோயினால் நாடு இத்தகைய ஆபத்தான சூழலில் இருக்கும் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகரிக்கத் தான் போகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கும் அல்லது அதிகரிப்பதற்குமான கொள்கை முடிவுகளைத் தொடர்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்தியாவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
என மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.