மக்களவை பொதுத்தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழக சட்டமன்றத்தில் தற்போது 21 இடங்கள் காலியாக இருக்கிறது என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
திருவாரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தேதியில் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. ஆகவே இந்த தொகுதிகளுக்கு எல்லாம் உடனடியாக தேர்தலை நடத்த வில்லையென்றால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட கடமையை தேர்தல் ஆணையம் மீறுவதாக அமைந்து விடும்.
ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஆகவே நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும்.
இது வாக்காளர்களுக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கவும், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சவுகரியமாகவும் இருப்பது ஒருபுறமிருக்க, அரசு கஜானாவிற்கு மற்றுமொரு தேர்தல் செலவு ஏற்படாமல் தவிர்க்கும்.
தனியாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதனால் பயனடையும். நாடாளுமன்ற தேர்தலுக்கும், இந்த 21 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தான் என்பதால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோருவதில் நியாயம் இருக்கிறது என்றே கருதுகிறேன்.
ஆகவே, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற இருக்கின்ற 17-வது நாடாளுமன்ற தேர்தலின் போதே இடைத் தேர்தலை நடத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.