This Article is From Jun 01, 2019

இந்தி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும்: கனிமொழி

இந்தி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இந்தி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும்: கனிமொழி

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது, 

எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை கொண்டிருக்காவிட்டாலும், நிச்சயமாக மொழித் திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்க்கும். எந்த மொழி திணிக்கப்பட்டாலும், அது இந்தியாக இருந்தாலும் திமுக எதிர்க்கும், நாடாளுமன்றத்திலும் திமுக நிச்சயம் எதிர்க்கும். 

நாடாளுமன்றத்தில் ஒரு நபர் இருந்த காலக்கட்டத்திலே தமிழகத்தின் உரிமைகளுக்காக திமுக குரல் கொடுத்து வந்ததுள்ளது. அதனால், நாடாளுமன்றத்தில் 37 பேர் இருந்தாலும், எத்தனை பேர் இருந்தாலும் தொடர்ந்து தமிழகத்திற்காக திமுக குரல் கொடுக்கும், 

மோடியின் புதிய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாதது குறித்து பாஜக அல்லது அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவே தமிழத்திற்கான பாதிப்பு தான். அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கு காரணம் அவர்களின் உள்கட்சி விவகாரம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

அதிமுகவில் ஆட்சிக்காக ஒரு இணைந்த செயல்பாடு என்பது போன்ற வெளிப்புற தோற்றம் இருக்கிறதே தவிர, உள்ளே இருக்கும் பிரச்சனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.


 

.