This Article is From Jul 10, 2019

நீட் விலக்கு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டது அரசு: ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனவும் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி சண்முகம்


நீட் விலக்கு பிரச்னையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு மறைத்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்ற உண்மையை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்துவிட்டார் என குற்றம்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். எனினும், மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். 

நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனவும் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது என்று அவர் கூறினார். 

Advertisement

இதையடுத்து சி.வி.சண்முகம் கூறிய பதிலில் திருப்தியில்லை என்று கூறி திமுக வெளிநடப்பில் ஈடுபட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். அப்போது சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார். ஆனால் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் அவையில் தெரிவிக்கவில்லை.

Advertisement

இதுகுறித்து தெளிவான பதிலை சட்டத்துறை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சொல்லவில்லை. கடிதம் வந்தவுடனே அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி சண்முகம் என குற்றம்சாட்டினார். 

முன்னதாக, நீட் விவகரம் தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருத்து குறிப்பிடத்தக்கது.
 

Advertisement