பாஜக அரசை வீழத்த, எதிர்கட்சிகள் ஒன்றினைந்து புதிய திட்டம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். கடந்த பல ஆண்டுகளாக எதிர் எதிர் அணியில் இருவரும் இருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.
ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திந்த சந்திரபாபு நாயுடு, ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க இந்த கூட்டணி அவசியம் ஆகியுள்ளது என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், கடந்த காலத்தில் எங்கள் இருவருக்கும் மோசமான அனுபவங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. எங்களது இப்போதைய ஒரே குறிக்கோள் பாஜகவை வீழ்த்துவதான். நாங்கள் எதிர்காலத்தை பற்றித்தான் பேச விரும்புகிறோம் என்றார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணி குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!
‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்' என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.