"அந்த தில் இந்த அதிமுக அரசுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அந்த தில் வரவே வராது."
குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இதற்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கேலி செய்யும் விதத்தில் நடந்து கொண்டதால், நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ, தமீமுன் அன்சாரி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே வந்து இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “சிஏஏவுக்கு எதிராக நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கேட்கப்பட்டது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இதற்கான கோரிக்கையை சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் வைத்தோம். மீண்டும் திமுகவின் துரைமுருகன் அது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர், ‘தீர்மானம் ஆய்வில் இருக்கிறது' என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
நாட்டில் இருக்கும் மக்கள் தங்களது குடியுரிமையே பறிபோய்விடும் என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். தினம் தினம் சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஆனால் கள நிலவரம் என்னவென்று தெரியாமல், தீர்மானம் பற்றி கேட்டால் சபாநாயகர் சிரிக்கிறார். அவரின் இந்த செயல் எங்கள் மனதை புண்படுத்திவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்,” என ஆவேசமாக பேசினார்.
முன்னதாக இது குறித்து பேசிய துரைமுருகன், “நாடு முழுவதும் பல மாநில முதல்வர்களும் என்ஆர்சிக்கு சிஏஏவுக்கும் எதிராக நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி வலியுறுத்தியும் அது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறது அதிமுக அரசு. எதற்கெடுத்தாலும் ஆய்வில் இருக்கிறது என்கிறார் சபாநாயகர். அவரின் ஆயுள் முடிந்தால் கூட தீர்மானம் ஆய்வில்தான் இருக்கும் போல.
மத்திய அரசை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற ஒரு தில் வேண்டும். அந்த தில் இந்த அதிமுக அரசுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அந்த தில் வரவே வராது. காரணம் இவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள்,” என்று கடுகடுத்தார்.