பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை என்கிறார் கமல்.
ஹைலைட்ஸ்
- பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை
- பட்ஜெட்டின் ஓட்டைகளை பொருளாதார வல்லுனர்களால் மட்டுமே அடையாளம் காணமுடியும்
- மத்திய அரசு தங்களுக்கு தாங்களே சுய சேவை செய்து கொள்ளும் பட்ஜெட்: கமல்
ஓட்டுக்கு முறைப்படி பணம் கொடுப்பது போல் மத்திய அரசின் பட்ஜெட் இருப்பதை சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும் என்று மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம்தேதி தாக்கல் செய்தது. இதில் குறிப்பிடத்தகுந்த வகையில் ரூ. 5 லட்சம் வரை வருமான வரியில் விலக்கு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றன.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ட்விட்டர் அவர் கூறியிருப்பதாவது-
மத்திய பட்ஜெட்டை மேலோட்டமாக பார்த்தால் நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைப் போன்று தோற்றம் அளிக்கிறது. ஆனால் பட்ஜெட்டில் உள்ள ஓட்டைகளை பொருளாதார வல்லுனர்களால் மட்டுமே அடையாளம் காண முடியும்.
மத்திய பட்ஜெட்டின் சில பகுதிகள் ஓட்டுக்கு முறைப்படி பணம் கொடுப்பதை போல் உள்ளது. இதனை சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ளமுடியும். பட்ஜெட்டில் வாக்குறுதி அளித்த கட்சி அடுத்து ஆட்சியில் இருந்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றலாம்.
ஆனால் மக்கள் மற்றொரு கட்சியை தேர்வு செய்தால் நிலைமை என்னவாகும்?
இந்த பட்ஜெட் அறிவிப்புகள் சற்று சிக்கலானவை. இதனை புதியதாக ஆட்சிக்கு வரும் கட்சி கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்கிற அவசியம் இருக்கிறதா?
மத்திய அரசு தங்களுக்கு தாங்களே சுய சேவை செய்து கொள்ளும் பட்ஜெட்டாக இது இருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.