தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் வளரும் தமிழகம் கட்சியின் வேட்பாளர் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்
தமிழகத்தில் வரும் மே 19 ஆம் தேதி, சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இடைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை நேற்று ஆரம்பித்தார். அவர் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் வளரும் தமிழகம் கட்சியின் வேட்பாளர் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய கமல், ‘இந்த 4 சட்டமன்ற இடைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. பல கட்சிகள் பண கொடுக்க தயாராக இருக்கின்றன. நீங்கள் சொல்லலாம், எங்களுக்கு மிகவும் கஷ்டம் இருக்கிறது. அதனால், நாங்கள் பணம் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று.
ஆனால், அவர்கள் ஓட்டுக்காக உங்களுக்குக் கொடுக்கும் பணம் என்பது மிக சொற்பம். உங்களுக்கு உண்மையில் சட்டப்படி, நியாயப்படி வந்து சேர வேண்டிய பணம் மிக அதிகம். அதை புரிந்து கொள்ளுங்கள். அதை மனதில் வைத்து வாக்களியுங்கள். இந்த இடைத் தேர்தல்களில் மிகப் பெரிய சூதாட்டம் நடக்கப் போகிறது. மக்களாகிய நீங்கள்தான் அதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்' என்று கூறினார்.