This Article is From Dec 27, 2019

145 நாட்களுக்கு பின்னர் கார்கிலில் மீண்டும் இணைய சேவை தொடங்கியது!!

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் இணைய சேவை வாங்கப்பட்டுள்து. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு, லடாக் மற்றும் காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் அமைந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்டர்நெட் சேவை முடக்கம் தொடர்கிறது
  • நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் உள்ளனர்.
Kargil:

145 நாட்கள் கட்டுப்பாட்டுக்கு பின்னர் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அங்கு மொபைல் இன்டர்நெட் செயல்படத் தொடங்கியது. 

இருப்பினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அங்கு இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கார்கில் பகுதியில் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

கார்கில் பகுதியில் முற்றிலும் அமைதி திரும்பி விட்டதால் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 மாதங்களாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த சேவையை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளூர் மக்களை மதத் தலைவர்கள கேட்டுக் கொண்டுள்ளனர். பிராட்பேண்ட் சேவையும் கார்கிலில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

நாட்டின் மற்ற மாநிலங்கள் பெறும் சலுகைகள், பயன்கள், சேவைகளைப் போன்று ஜம்மு காஷ்மீரும் பெற வேண்டும் என்பதால் அதற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக கலவரம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக அரசியல் தலைவர்கள் கைது, சுற்றுலா பயணிகள் வெளியேற்றம், பாதுகாப்பு படையினர் குவிப்பு, போன் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

நிலைமையை பொறுத்து இந்த கட்டுப்பாடுகள் தளர்வு படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்டர்நெட் சேவை நிறுத்தம் தொடர்கிறது.

அரசியலமைப்பின் பிரிவு 370 காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நீக்கியது. இதனால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் வீட்டுக் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

83 வயதாகும் பரூக் அப்துல்லா மேலும் 3 மாதங்களுக்கு பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பார் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் எந்தவொரு நபரையும் விசாரணையின்றி 3 முதல் 6 மாதங்கள் சிறையில் அடைக்க வகை செய்கிறது. 

இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டதால் மக்களுக்கு அத்தியாவசிய பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த மாதம் இதுபற்றி பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைதி திரும்பி விட்டது என்று உள்ளூர் நிர்வாகம் கருதினால் இணைய சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். 

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

.