This Article is From Mar 01, 2020

மோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்

டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

மோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்

வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன்

ஹைலைட்ஸ்

  • மோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும் - திருமாவளவன்
  • டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சர் கட்டுபாட்டிலே உள்ளது.
  • டெல்லி வன்முறையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவிவிலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் 4 நாட்களாக நடந்த கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த பிப்.23 முதல் 26ம் தேதி நடந்த கலவரத்தில் வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், தனியார்ப் பள்ளிகள் உள்ளிட்டவைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசாரால் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் அதனால், தான் கலவரம் 4 நாட்களாகத் தொடர்ந்தது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, டெல்லி கலவரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான் சங்க் பரிவார்களின் எண்ணம். அதன்படி தான் மத்திய அரசின் ஆட்சியும் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இது தெரியாமல் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.  
மேலும் அவர் கூறும்போது, டெல்லியில் நடந்த வன்முறை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. வன்முறைச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். 

டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. வன்முறையில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதன் மூலம் அரசியல் தலையீடு இருப்பது உறுதியாகி உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். 

.