காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.
அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. வீரர்கள் 44 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.
காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது, நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும். தமிழகத்தில் கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் படிக்க : தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு