Read in English
This Article is From May 13, 2020

மோடியின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு: ஆனந்த் மஹிந்திரா, அதானி புகழாரம்!

கடந்த 6 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமான நிலையிலேயே இருந்து வரும் நிலையில்...

Advertisement
இந்தியா Edited by

மார்ச் 25 ஆம் தேதி முதல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Highlights

  • பிரதமர் மோடி, நேற்றிரவு 8 மணி அளவில் உரையாற்றினார்
  • பொருளாதார சீர்திருத்தம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் மோடி
  • ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். இந்நிலையில் மோடியின் உரையில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர் பிரபல தொழிலதிபர்களான ஆனந்த் மஹிந்திரா மற்றும் கவுதம் அதானி ஆகியோர். 

நேற்றைய உரையின்போது, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 

அவர் மேலும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளேன். 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' என்ற இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும் என்று கூறினார். 

Advertisement

இதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ‘பிரதமர் மோடியின் உரையில் ‘பிழைத்திருத்தலில்' இருந்து ‘வலுவடைதல்' குறித்தான தொனி இருந்தது. 1991 ஆம் அறிவிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் போல பிரதமரின் அறிவிப்பும் இருக்குமா என்பது நாளைய விளக்கத்தின்போது தெரிந்துவிடும். எனக்கு இன்று தூக்கம் வராது என நினைக்கிறேன்!' என்று ட்விட்டர் மூலம் நேற்றிரவு கருத்துப் பதிவிட்டார். 

அவரைப் போலவே அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ‘ஆத்மநிர்பார் பாரத் திட்டம், அதன் பெருந்தொகைக்காக மட்டுமல்ல மிகவும் விரிவான தொலைநோக்கிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக உள்ளது. நிலம், ஊழியர்கள், சட்டம் என பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தியாவை மாற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசு கொண்டிருக்கும் திட்டத்தின் ஆதாரமாக இந்த அறிவிப்பு இருக்கலாம்,' என மோடியின் உரையைப் புகழ்ந்துள்ளார். 

இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்புகளான CII, FICCI, CAIT உள்ளிட்ட அமைப்புகளும் பிரதமர் மோடியின் உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து பாராட்டியுள்ளன. 

Advertisement

“பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக இருப்பவை நிலம், ஊழியர்கள், லிக்வுடிட்டி மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட துறைகள்தான். அதில் சட்டங்கள் எளிமையாக்கும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டதை வரவேற்கிறோம். தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்த இக்கட்டாக காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியின் அடுத்த அலை ஏற்படும்,” என்று கூறியுள்ளார் சிஐஐ-யின் இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி.

FICCI தலைவர் சங்கிதா ரெட்டி, “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்க உரையில், ஏழை மற்றும் அதிகம் நிதியுதவி தேவைப்படுபவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறோம். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் எளிய மக்கள் பயன் பெற வேண்டும். தற்போதுள்ள நிலம், ஊழியர்கள் மற்றும் லிக்வுடிட்டி சார்ந்த அழுத்தங்கள் தளர்த்தப்பட்டால் இந்தியா தற்சார்புடையதாக மாறும்,” என்றுள்ளார். 

Advertisement

மார்ச் 25 ஆம் தேதி முதல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைக்க போடப்பட்ட இந்த ஊரடங்கினால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வேலை இழந்துள்ளனர். 

கடந்த 6 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமான நிலையிலேயே இருந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு அதை மேலும் அதலபாதாளத்துக்கு இட்டுச் செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் மூலம் இதுவரை இல்லாத வேலைவாய்ப்பின்மை உருவாகும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். 

Advertisement

இந்தியாவில் இதுவரை 70,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,293 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்திற்குள் கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் எனப்படுகிறது. மே 17 ஆம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும், மேலும் அது நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இந்திய ரிசர்வ் வங்கி, 1.74 லட்சம் கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிதியுதவியானது மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொடுக்கும் என்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மிக ஏழை மக்களுக்கு இது உதவும் என்று சொல்லப்பட்டது. ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை என்று பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

Advertisement


 

Advertisement