This Article is From Dec 27, 2018

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு

ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக கோர்தான் சடாபியா நியமிக்கப்பட்டுள்ளார்.

சடாபியா உள்பட மொத்தம் 17 பேரை புதிய மாநில பொறுப்பாளர்களாக பாஜக நியமித்திருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • உ.பி. மாநில மக்களவை தேர்தல் பொறுப்பாளராக சடாபியா நியமனம்
  • பாஜகவை விட்டு விலகிய சடாபியா 2014-ல் மீண்டும் இணைந்தார்
  • படேல் சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக சடாபியா உள்ளார்
New Delhi:

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்து வந்தவரும், அவரால் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவருமான கோர்தான் சடாபியாவுக்கு முக்கிய பொறுப்பை பாஜக அளித்திருக்கிறது.

நாட்டில் ஆட்சியை தீர்மானிக்கும் 80 மக்களவை உறுப்பினர்கள் தொகுதியைக் கொண்ட உத்தர பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக கோர்தான் சடாபியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2002-ல் குஜராத் கலவரம் நடைபெற்றபோது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின்போது கோர்தான் சடாபியா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அதன்பின்னர், அப்போதைய முதல்வர் மோடியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கட்சியை விட்டு விலகிய சடாபியா, மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். தனிக்கட்சி ஆரம்பித்ததுடன் மோடிக்கு எதிரானவர்களை திரட்டி பாஜகவுக்கு எதிராக தேர்தலிலும் போட்டியிட்டார்.

சடாபியாவுக்கு விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. பிரவீன் தொகாடியா தனது தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதும் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவராக சடாபியா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சடாபியா கடந்த 2014-ல் பாஜகவில் மீண்டும் இணைந்தார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் வருவதையொட்டி, உத்தர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக சடாபியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

.