New Delhi: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடி தலைமையிலான அரசு ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஏபிபி தேசிய செய்தி சேனலின் பிரபலமான இரண்டு இதழியலாளர்களான மிலிந்த் கண்டேகர் மற்றும் புன்யா பிரசன் பாஜ்பாய் தங்கள் பணியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். மேலும் அந்த சேனலில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த ‘மாஸ்டர்ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சியும் நீக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னர் தான், பிரதமர் மோடி சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்று கையாளப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் உரையாடியது அரசு சார்பில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அந்தப் பெண் பிரதமரிடம், விவசாயத்தில் தனது வருவாய் எப்படி அதிகரித்திருக்கிறது என்பது குறித்து பேசினார். இதன் பிறகு அந்தப் பெண்ணை நேரில் சென்று பேட்டி கண்டது ஏபிபி செய்தி சேனல். அப்போது, அந்தப் பெண், ‘எனக்கு அப்படி பேசும்படி சொல்லிகொடுக்கப்பட்டது’ என்றார். இந்தப் பேட்டி மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வெளியானது.
இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கண்டித்திருந்தார். மேலும், பலர் இந்த நிகழ்ச்சியை சரிவர பார்க்க முடிவதில்லை, ஏபிபி சேனலில் சில இடையூறுகள் இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஏபிபி செய்தி சேனலிலிருந்து மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சி தூக்கப்பட்டது. அந்த சேனலின் இரண்டு பத்திரிகையாளர்கள் பணியை ராஜினாமா செய்ததும் கவனம் பெற்றது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால், ‘சுதந்திரமாக இயங்கும் ஊடகம் தான் ஒரு ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால், ஊடக சுதந்திரத்தை கொலை செய்யும் வகையில் மோடி தலைமையிலான அரசு நடந்து கொள்கிறது. ஏபிபி செய்தி சேனலைச் சேர்ந்த இரண்டு பிரபலமான பத்திரிகையாளர்களின் ராஜினாமா இதற்கு மிகச் சிறந்த சான்று. ஊடகங்கள் இப்போதே விழித்தெழ வேண்டும். இல்லையென்றால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விடும்’ என்று கொதி கொதித்துள்ளார்.