மோடி வெற்றி பெறுவார் என யாரும் கூறவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- பாஜக-ஆர்எஸ்எஸ், முற்போக்கு சக்திகளுக்கு இடையேயான சிந்தாந்த போர் நடக்கிறது
- சிந்தாந்தத்திற்கு எதிரான போர் என்பது அரசியலமைப்பிற்கே அச்சுறுத்தல்
- நாட்டை கட்டுப்படுத்த சில சக்திகள் முயற்சிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
Shujalpur, Madhya Pradesh: பிரதமர் மோடி என் மீதான தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடைசி 2 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக மத்திய பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜிஎஸ்டி, பணமதிப்பிழக்கம், ஊழல் மற்றும் விவசாய பிரச்சனைகள் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது அன்பால் நிறைந்த நாடு, தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துபவர் அவர். பொது நிகழ்ச்சிகளில் நான் அவரை அன்புடன் அனுகுகிறேன். ஆனால், அதற்கு கூட அவர் பதில் அளிக்கமாட்டார். நான் அவருடன் மரியாதையுடன் பேசினாலும், அவர் என்னிடம் பதிலுக்கு அவ்வாறு பேசுவதில்லை என்று கூறினார்.
பிரதமர் மோடி எனக்கு ஒரு நாட்டை எப்படி வழி நடத்தக்கூடாது என்பதை காட்டியுள்ளார். யார் கூறுவதையும் கேட்காமல், நாட்டை ஆட்சி செய்தால் அந்த நாடு சரியாக இயங்காது என்றார்.
5 வருடத்திற்கு முன்னதாக யாரும் மோடியை வீழ்த்த முடியாது என்று கூறினார்கள். ஆனால், நாங்கள் அதனை ஏற்கவில்லை. நாங்கள் நாடாளுமன்றத்திலும் சரி வீதியிலும் சரி நேருக்கு நேராக அவரை எதிர்கொண்டோம். தற்போது, அவர் எங்களை எதிர்கொள்ள பயப்படுகிறார்.
தற்போதைய தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, நீங்கள் பிரதமராக வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மக்களே அதை முடிவு செய்ய வேண்டும். மக்களின் விருப்பத்தை நான் பின்பற்றுகிறேன் என்று கூறினார். அதனால், மே.23க்கு முன்பாக இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது என்றார்.
சாம் பிட்ரோடா 1984 சீக்கிய கலவரம் குறித்து பேசிய கருத்து முற்றிலும் தவறானது. அது குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. யார் கலவரத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்சியின் கீழ் இந்த நாடு ஆட்சி புரிய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பாஜக - ஆர்.எஸ்.எஸ் மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு இடையில்தான் இன்று போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நான் எங்கு சென்றாலும், மக்கள் அச்சத்தில் இருப்பதை உணர முடிகிறது என்று அவர் கூறினார்.