மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இன்று பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
Houston: பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருவார கால அமெரிக்க சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். ஹவுஸ்டன் நகருக்கு வந்த அவரை இந்திய வம்சாவளியினரும், அமெரிக்க அதிகாரிகளும் வரவேற்றனர். அமெரிக்க பயணத்தின் முக்கிய நிகழ்வாக 'ஹவுதி மோடி' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று மாலை பங்கேற்கிறார்.
அவருடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஹவுஸ்டனில் வசிக்கும் இந்தியர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். இந்தியா - அமெரிக்கா உறவுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அமெரிக்க எம்.பி.க்கள், அமெரிக்காவில் உயர் நிலையில் இருக்கும் இந்தியர்களும் இந்த ஹவுதி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சுமார் 400 கலைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமெரிக்காவின் எரிசக்தி துறை நிறுவனங்களின் தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். இதில் இந்தியாவில் எரிசக்தி துறையில் முதலீடு செய்வது தொடர்பாக முக்கியமாக பேசப்பட உள்ளது.
செவ்வாயன்று பிரதமர் மோடியும் - அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு தரப்பு உறவு, இரு நாடுகளுக்கு இடையே காணப்படும் வர்த்தக பிரச்னைகள் உள்ளிட்டவை தொடர்பாக இந்த சந்திப்பின்போது பேசப்படும்.
புதன் அன்று, அமெரிக்காவின் 40 முக்கிய நிறுவனங்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது இந்தியாவுக்கு மிக முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது. வியாழன் அன்று மோடி ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேச உள்ளார்.