This Article is From Aug 08, 2019

''சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது'' : மோடி

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இரவு 8 மணிக்கு உரையாற்றினார். மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகளால் காஷ்மீர் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தீவிரவாதத்தை வென்று காஷ்மீர் மக்கள் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவார்கள் என்று மோடி பேசியுள்ளார்.

''சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது'' : மோடி

சிறப்பு அந்தஸ்தால் தீவிரவாதம்தான் பெருகியது என்று மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

New Delhi:

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீரில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சரியாக இரவு 8 மணிக்கு மோடி உரையாற்றினார். 

மோடி தனது உரையில் குறிப்பிட்டதாவது-

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை நீக்கியுள்ளோம். இதன் மூலம் ஜமுமு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. 

காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும். அந்த உரிமைகள் எப்போதும் நிலைத்திருக்கும். சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்ற முடிவை நீண்ட ஆலோசனைக்கு பின்னர்தான் எடுத்தோம். 

பிரிவினைவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவைகளில் இருந்து ஜம்மு காஷ்மீரை நாம்தான் காப்பாற்ற வேண்டும். யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவுதான். நிலைமை சரியாக வரும்போது மாநில அந்தஸ்தை காஷ்மீர் பெறும். விரைவில் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். 

கவர்னர் ஆட்சியின்போதுதான் காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் நடந்திருக்கின்றன. 370 பிரிவு ரத்தால் பிரதமரின் உதவித் தொகை காஷ்மீர் குழந்தைகளுக்கு கிடைக்கும். 

காஷ்மீரில் இனி வேலை வாய்ப்புகள் பெருகும். காஷ்மீர் மற்றும் லடாக்கை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது குறிப்பிட்ட ஒரு பகுதியினர் மட்டுமே பயன்பெற்றனர். சினிமா படக்காட்சிகளை எடுப்பதற்கான தடை காஷ்மீரில் நீக்கப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி தயாரிப்பாளர்கள் காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும். 

மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகளால் காஷ்மீர் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தீவிரவாதத்தை வென்று காஷ்மீர் மக்கள் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவார்கள். காஷ்மீரில் இயற்கை வளங்கள், மூலிகை வளங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை விவசாயிகள் சந்தைப் படுத்தி முன்னேற வேண்டும். 

ஏராளமான விளையாட்டு வீரர்கள் காஷ்மீரில் இனி உருவாகுவார்கள். அவர்கள் பல விருதுகளை வெல்வார்கள். சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் லடாக் பகுதி முக்கிய இடமாக இருக்கும். 
 

இவ்வாறு மோடி பேசினார்.

.