காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைக்கும் கட்சி என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ் காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
Varanasi: காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைக்கும் கட்சி என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ் காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் சொன்ன கருத்தான, ‘அரசு கொடுக்கும் 1 ரூபாயில் வெறும் 15 பைசாதான் மக்களை சென்றடைகிறது. இந்த கசிவை அரசால் தடுக்க முடியவில்லை' என்பதை மேற்கொள் காட்டியுள்ளார் மோடி.
அவர் பேசுகையில், “முன்னாள் பிரதமர் ஒருவர் ஊழல் குறித்து சொன்ன கருத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் 1 ரூபாயில் வெறும் 15 பைசாக்கள்தான் மக்களை சென்றடைகிறது. பாக்கி 85 பைசாவின் நிலை என்னவென்றே தெரிவதில்லை என்று சொல்லி இருப்பார். இந்த நாட்டைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியே இதை ஒப்புக் கொண்டுள்ளது.
அவர்கள் ஆட்சியில் இது மாறவேயில்லை. இந்த குறைபாட்டை அவர்கள் ஒப்புக் கொண்டனர். 1 ரூபாயில் 85 பைசா கொள்ளை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது” என்று பேசினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்தக் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸை, பிரதமர் மோடி விமர்சிப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் இதே கருத்தைச் சொல்லி அவர் காங்கிரஸ் கட்சியை கண்டித்துள்ளார்.