கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய மோடி, சீனாவுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தார்.
ஹைலைட்ஸ்
- இன்று மாலை 4 மணிக்கு மோடி உரை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- எல்லையில் இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது
- இந்தியாவில், கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - சீன ராணுவப் படைகளுக்கு இடையே கல்வான் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையிலும், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் அவர் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய மோடி, சீனாவுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தார். “இந்தியாவுக்கு நட்புறவை எப்படி நிர்வகிப்பது என்பது நன்றாகத் தெரியும். அதைப் போலவே நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் வந்தால் அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பதும் தெரியும். நமது தீரமிக்க ராணுவ வீரர்கள் அதைச் செய்து காட்டினார்கள். சீனப் பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு வணிகர்கள் மற்றும் நாட்டு மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கிறேன். நாம் உள்ளூர் பொருட்களை வாங்கி, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுவாக்குவோம்” எனப் பேசினார்.
நேற்று மத்திய அரசு, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. “இந்த செயலிகளில் இருக்கும் தகவல்கள் மூலம் இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும், சமூக நல்லிணக்கத்துகும் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தடை செய்யப்படுகின்றன,” என அறிக்கை மூலம் தடை ஆணைக்கு விளக்கம் கொடுத்தது மத்திய அரசு.
அதேபோல, இந்தியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக திறம்பட போராடி வருவதாக கடந்த வாரம் பேசினார் மோடி. “இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் இந்த உலகையே ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்தன. இந்த நாடுகளின் மொத்த ஜனத் தொகை 24 கோடி இருக்கும். நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் ஜனத் தொகை மட்டும 24 கோடி. இந்த 4 நாடுகளில் 1,30,000 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் 600 பேர்தான் இறந்தனர். இது உத்தர பிரதேசம் எப்படி முனைப்பாக செயல்படுகிறது என்பதை காண்பிக்கிறது,” எனப் பேசினார் மோடி.
இந்தியாவில் இதுவரை 5,48,318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,475 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இந்திய மாநிலங்கள்.
தற்போது கொரோனா கன்டெயின்மென்ட் மண்டலங்களில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது, ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவவில் மேலும் பல கட்டுப்பாடுகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், மதுபானக் கூடங்கள், சமூகக் கூடங்கள் மற்றும் மெட்ரோ சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.