மசோதாவில் சிறைத் தண்டனை கொடுக்கும் பிரிவை நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஹைலைட்ஸ்
- முத்தலாக் மசோதா, நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
- இதுவரை இரு முறை முத்தலாக் மசோதாவை சட்டமாக்க காங். தவறிவிட்டது: மோடி
- முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே காங்கிரஸ் பார்க்கிறது: பாஜக
New Delhi: நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் முத்தலாக் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மசோதா, சட்டமாற உருபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு, தாக்கல் செய்துள்ளது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “முத்தலாக் மசோதா என்பது பெண்கள் முன்னேற்றத்துக்கான மசோதா. அதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் நடந்து கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், “1950-களில் காங்கிரஸ், அனைவருக்கும் ஒரே சட்டமான ‘யூனிஃபார் சிவில் கோட்'-ஐக் கொண்டு வரத் தவறியது. அதற்கு பதில் ‘இந்து மசோதாக்களை' கொண்டு வந்தது.
1980-களில் மீண்டும் முத்தலாக் மசோதாவைக் கொண்டு வரும் வாய்ப்பு காங்கிரஸுக்குக் கிடைத்தது. ஆனால், களத்தில் இருக்கும் நிலைமை புரியாமல் அப்போதும் அதைத் தவறவிட்டது காங்கிரஸ்.
35 ஆண்டுகள் கழித்து காங்கிரஸுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெண்களின் மாண்பைக் காக்க நாங்கள் முத்தலாக் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளோம். அதை எந்த ஒரு சமூகத்துடனும் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசினார் மோடி.
முத்தலாக் மசோதாவுக்குக் காங்கிரஸ் மட்டுமல்ல, பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. முத்தலாக் மசோதா மூலம், பெண்களை விவாகரத்து செய்யும் முஸ்லிம் ஆண்களுக்கு மூன்றாண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், திமுக, நவீன் பட்நாயக் தலைமையிலா பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முத்தலாம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மசோதாவில் சிறைத் தண்டனை கொடுக்கும் பிரிவை நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு தரப்போ, “இந்த மசோதா பெண்களுக்கு சம உரிமை வழங்கும்” என்று கருத்து கூறுகிறது.
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை. இதனால் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற மற்ற கட்சிகளும் ஆதரிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.