கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் மற்றும் தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி,
இந்தியா எனும் ஒரு நாட்டிற்கு பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த வித்தியாசங்கள், நாகரீகம், பண்பாடு, வரலாறு, மொழி ஆகியவற்றை நாம் அதிகம் மதிக்கின்றோம்.
நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உண்டு. திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி, பாஜகவை எதிர்க்கின்றது. அவரது ஒரு சிந்தனை மக்களை வழிநடத்தும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இருப்பதை மறந்துவிடுகிறார்.
இந்திய அளவில் தமிழக மக்களின் குரல் ஒலிக்கவில்லை. தமிழகத்தின் குரல் நாடு முழுவதும் கேட்க செய்ய வேண்டும், பன்முக தன்மையை பாதுகாக்கவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மோடியை எதிர்க்கிறோம்.
அதிமுக ஆட்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழகத்தையே கட்டுப்படுத்த மோடி நினைக்கிறார். தமிழக மக்களை அவமதிப்பதால் பாஜக, அதிமுக ஆகியன எப்போதும் ஆட்சி நடத்த இயலாது. அன்பு செலுத்தினால் மட்டுமே ஆட்சி செய்ய இயலும். நான் அதை நன்கு புரிந்திருக்கிறேன்.
வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என தெரியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமர் மோடி பார்க்கக்கூட இல்லை.
இளைஞர்களுக்கு எங்கும் வேலையும் கிடைக்கவில்லை. எனவே தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைக்கவே காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகிறோம் என்று அவர் கூறினார்.