வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது தான் பிரதமர் மோடி அரசின் சாதனை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பேசியதாவது,
இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுகிறாரே தவிர, ஒன்று கூட செய்யவில்லை.
மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது தான் இந்த மோடி அரசின் சாதனை. இதனை நான் கூறவில்லை. ஆய்வு அறிக்கை ஒன்றில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் 6.1% வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
அண்மையில் கூட பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அந்த விழா வெறும் அடிக்கல் நாட்டு விழா தான். அடிக்கல் நாட்டினால் போதுமா? அதற்கு பணம் ஒதுக்க வேண்டாமா? மருத்துவமனை தானாக வந்து விடுமா? ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உத்தரபிரதேசத்திற்கே தராதவர், மதுரைக்கா தரப்போகிறார்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.