ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். மு.க.ஸ்டாலின் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் பரபரப்பாக இருந்து வருவதால், அவரை சந்திக்க முடியவில்லை. இதனால், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கு - தமிழ் மக்களின் உறவு என்பது அண்ணன் - தம்பி உறவு போன்றது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை, மோடியின் ஆட்சி தான் நடைபெறுகிறது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் முதல்வராக பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவே சென்னை வந்துள்ளேன்.
குடிமக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிப்பது ஜனநாயகத்தை ஏமாற்றுவதற்கு சமம். தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது சரியான நடைமுறை அல்ல. மக்கள் தொகை அதிகம் உள்ள 10 நாடுகளில் 3-ல் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை. வாக்குச்சீட்டு முறையைத் தான் பயன்படுத்துகின்றன. அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம்
டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா? மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 2% சரிந்து உள்ளது. வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு பெருமளவு அதிகரித்து உள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கை சரியானது அல்ல என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
அனைத்து நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும் கருப்பு பணம் விளையாடுகிறது. கருப்பு பணத்தை முற்றிலும் ஒழித்துவிட்டதாக மோடி அரசு கூறியது. கருப்பு பணம் இப்போது எங்கிருந்து வந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.