ஹைலைட்ஸ்
- 8-ம்தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
- துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்
- இன்று மத்திய பட்ஜெட் தாக்கலானது
10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்யும்போது ஏழைகள் கண்ணுக்கு தெரியவில்லையா? ஏழைகளைப் பற்றி ராகுலை சிந்திக்க வைத்ததுதான் மோடியின் வெற்றி என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து பாஜக மாநித் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறும்போது,
எதிர்கட்சிகள் இப்போதுதான் ஏழைகளை பற்றி நினைவில் கொள்கிறார்கள். சிறு வியாபாரிகளை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாமானிய மக்களின் பிரதமராக மோடி உள்ளார். விவசாயிகளுக்கு ஊதியம், வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகை என, வசதியாக, இலகுவாக வாழக்கூடிய நிலையை பாஜக ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முந்தைய 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானத்தை ஏன் அறிவிக்கவில்லை? அப்போது ராகுல்காந்திக்கு ஏழைகள் கண்ணுக்கு தெரியவில்லையா? ஏழைகளைப் பற்றி ராகுலை சிந்திக்க வைத்ததுதான் மோடியின் வெற்றி. காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.